ஹைதராபாத்: பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரண் ஜோஹர், பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு 'ஏ தில் பை முஷ்கில்' திரைப்படம் வெளியானது. அதன் பிறகு 'லஸ்ட் ஸ்டோரிஸ்' உள்ளிட்ட சில வெப் தொடர்களை மட்டுமே இயக்கினார், திரைப்படம் இயக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர், "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில், நாயகனாக ரன்வீர் சிங்கும், கதாநாயகியாக ஆலியா பட்டும் நடித்து உள்ளனர். தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இப்படம் 178 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கிய இப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியாவில் 2,000 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 300 திரையரங்குகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது. பாலிவுட்டில் இப்படம் வெளியானபோது பெரிய அளவில் போட்டி இல்லை. ஹாலிவுட் படங்களான ஓப்பன்ஹெய்மர் மற்றும் பார்பி படங்கள்தான் போட்டியாக இருந்தன. வழக்கமான காதல் மற்றும் குடும்ப உறவுகளை தொடர்பான கதைக்களம் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. அதேநேரம் பிரபலங்கள் பலர் இப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி உள்ளனர்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் இப்படம் முதல் நான்கு நாட்களில் சுமார் 53 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இப்படம் முதல் நாளில், 10.5 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 16.5 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 18.7 கோடி ரூபாயும், நான்காவது நாளில் 6.5 கோடி ரூபாயும் வசூல் செய்து உள்ளது. நான்கு நாட்களில் மொத்தம் 53.4 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. நான்கு நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் இணைந்து உள்ளது.
வார இறுதி நாட்களில் வசூல் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது. வேலை நாளான திங்கள் கிழமை முதல் இப்படத்தில் வசூல் குறையத் தொடங்கி உள்ளது. வார இறுதியில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கும் வாரத்தின் தொடக்கத்தில் வசூல் குறையத் தொடங்குவது வழக்கம்தான்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'கல்லி பாய்' திரைப்படத்திற்குப் பிறகு, ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் இருவரும் "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" படத்தில் இணைந்து நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீடியோ: அமெரிக்க பாடகர் அகோனுடன் ரன்வீர் சிங் "சம்மக் சல்லோ"