சென்னை: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோரது சில திரைப்படங்கள் மட்டுமே தீபாவளி பண்டிகை நாட்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வந்தன. இந்த சாதனை முயற்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகியோரது திரைப்படங்களும் இந்தாண்டு களமிறங்கியுள்ளன.
நடிகர் கார்த்திக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா, காஷ்மோரா மற்றும் கைதி ஆகிய திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகி இருந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு இதுதான் முதல் தீபாவளி பந்தயமாக அமைந்துள்ளது. இன்று வெளியாகி உள்ள சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவாக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். அதேபோல் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள ‘சர்தார்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜிஷா விஜயன், ராஷி கன்னா போன்ற முண்ணனி நடிகைகள் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இவ்விரு படங்களும் இன்று (அக் 21) திரையரங்குகளில் தீபாவளி ரிலீசாக வெளியாகி உள்ளன. இதில் பிரின்ஸ் படம் காலை 5 மணி காட்சியிலும், சர்தார் 8 மணி காட்சியிலும் தொடங்கி உள்ளது. இரு படங்களையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன், சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகர்களாக படம் பார்த்து ரசித்தார்.
இதையும் படிங்க: ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் உடன் பிரின்ஸ் படம் பார்த்த சிவகார்த்திகேயன்