100 ஆண்டுகள் கடந்த தமிழ் சினிமாவில் ரீமேக் படங்களுக்கு என்று தனியிடம் நிச்சயம் உண்டு. எம்ஜிஆர் தொடங்கி இப்போது உள்ள நடிகர்கள் வரை, ரீமேக் படங்களில் நடித்துள்ளனர். இந்தியாவில் உள்ள தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், குஜராத்தி, வங்காளம் எந்த மொழிப்படமாக இருந்தாலும் அதனை நமது மொழிக்கு ஏற்றவாறு மாற்றி, இங்குள்ள மக்களுக்குப் பிடிக்கின்ற வகையில் படமெடுத்தால்தான் ரசிப்பார்கள்.
அப்படி ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்ற படங்கள் நிறைய இங்குள்ளன. ஆனால், ரீமேக் செய்கிறேன் எனும் பேர்வழியில் சமீபத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி, ஒரிஜினல் படத்தின் ஜீவனையும் பார்க்கும் ரசிகர்களின் உயிரையும், பதம்பார்த்த படங்களைத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
'பிரண்ட்ஷிப்' - மலையாளத்தில் வெளியான 'குயின்' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அர்ஜுன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா இயக்கியிருந்த படம். ஆண், பெண் நட்பு குறித்த படமாக எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. முக்கியத்துவம் இல்லாத காட்சிகள் மற்றும் தெளிவில்லாத திரைக்கதையால் தோல்வியைச் சந்தித்தது.
'தள்ளிப்போகாதே' - ஷிவா நிர்வானா இயக்கத்தில், நானி நடிப்பில் 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் 'நின்னுக்கோரி'. இப்படத்தை ஆர்.கண்ணன் தள்ளிப்போகாதே என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். அதர்வா, அனுபாமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கில் நானியின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் அதர்வா, நன்றாக நடித்திருந்தாலும் ஏனோ ஒன்று மிஸ்ஸான மாதிரி தெரிந்தது.
நல்ல கதையை செயற்கைத்தனமான காட்சி அமைப்புகளால் சிதைத்துவிட்டார், இயக்குநர். இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல சம்பவங்கள் செய்தவர்தான் இவர். இந்த ஆண்டும் அரை டஜன் ரீமேக் படங்களை தன்வசம் வைத்துள்ளார். குறிப்பாக, கிரேட் இந்தியன் கிச்சன், காசேதான் கடவுளடா போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவர உள்ளன. காத்திருப்போம்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஏராளமான ரீமேக் படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. அதுவும் ஒரே நாளில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'பயணிகள் கவனிக்கவும்', 'கூகுள் குட்டப்பா', 'ஹாஸ்டல்', 'விசித்திரன்', 'அக்கா குருவி' ஆகிய படங்கள் வெளியாகின. கடந்த வாரம்கூட உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' படம் வெளியானது.
இதில் கூகுள் குட்டப்பா மலையாளத்தில் வெளியான 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25' படத்தின் ரீமேக். கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், யோகிபாபு, லாஸ்லியா ஆகியோர் நடித்திருந்தாலும் படம் எடுபடவில்லை. மூலப்படத்தில் இருந்த உணர்ச்சிகரமான காட்சிகள் இதில் இருந்தும் ஏனோ செயற்கையாகவே தோன்றியது. குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரத்தின் பெயர் சாதிய அடையாளத்துடன் இப்படத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அது இப்படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இரட்டை இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இருவரும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்திருக்க வேண்டும். கே.எஸ்.ரவிக்குமார் இருந்தும் இப்படியா என்று ரசிகர்கள் நொந்துகொண்டதுதான் மிச்சம்.
'ஹாஸ்டல்' - மலையாளத்தில் 2015இல் வெளியாகி வெற்றிபெற்ற 'அடி காப்பியரே கூட்டாமணி'. ஒரு வெற்றிப்படத்தின் தரத்தை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்துவிட்டது, தமிழ் ரீமேக்கான ஹாஸ்டல். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானிசங்கர், சதீஷ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அவ்வப்போது தமிழில் நல்ல ரீமேக் படங்கள் வந்துவிட்டால், அதையெல்லாம் மறக்கடிக்கக்கூடிய வகையில் ’காட்டு மொக்கைப் படம்’ ஒன்றும் வந்துவிடும்.
இது அந்த வகையான படம். எந்தவொரு சிரத்தையும் இல்லாமல் எடுக்கப்பட்ட இப்படம் எடுத்த அவர்களுக்கும் பார்த்த நமக்கும் நேர விரயம்தான்.
இந்த ஆண்டு முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. இந்த ஆண்டும் நிறைய ரீமேக் படங்கள் வெளியாக உள்ளன. இவையாவது நமது ஏக்கங்களை தீர்த்து வைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: என் பெயரை சொல்லி பணம் பறிக்கிறார்கள்..! - குக் வித் கோமாளி புகழ்