சென்னை: தமிழ்ச்செல்வன் இயக்கத்தில், சிவகங்கை மாவட்ட திமுக நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'விழித்தெழு'. ஆன்லைன் சூதாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இப்படத்தில் அசோக், சரவணன், தயாரிப்பாளர் துரை ஆனந்த், ஆதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் தமிழ்செல்வன், தயாரிப்பாளர் துரை ஆனந்த் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் துரை ஆனந்த், "நான் அரசியல் பிரபலம் என்பதை பயன்படுத்தவில்லை. எனது சொந்த நிறுவனத்தின் மூலம் இப்படத்தை உருவாக்கியுள்ளேன். நான் திரைப்படம் தயாரிக்க போகிறேன் என்று சொன்னதும் எனக்கு நெருங்கிய நண்பர்களே வேண்டாம் என்று தடுத்தனர் . மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 3ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், 100 திரைகளுக்கு மேல் கிடைத்துள்ளது. நடிகர்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை ஊக்குவிக்கக் கூடாது. அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மீது அரசும், திரைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
நடிகர் சரவணன் பேசுகையில், "இந்த படத்தில் நான் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது நிஜ வாழ்வில் இதுபோன்ற மோசடி நிகழ்வு நடந்துள்ளது. இது ஒரு கருத்துள்ள படம். பருத்திவீரன் சரவணன் என்ற பெயர் இனி அழியாது" என கூறினார்.