தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலர், வசன எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் என வலம் வருபவர், கபிலன் வைரமுத்து. இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் இளைய மகன். இந்நிலையில், கபிலன் வைரமுத்து தான் எழுதியிருக்கும் புதிய நாவலை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின் அட்டைப் படத்தை தன் முகநூலில் இன்று (நவ.16) பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் செய்திருக்கும் பதிவில், ' 'நிழலுடைமை' - நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது என்பது வரலாறு. அது நிலவெளி எதார்த்தம். நிழல்வெளியாக இருக்கும் இணையவெளி நவீன நிலவுடைமைச் சமூகமாக தன்னைக் கட்டமைத்துவருகிறது. Digital Feudalism என்று ஆங்கில அறிஞர்கள் அழைக்கும் நிழலுடைமை ஆதிக்கத்திற்குநம் தரவுகளின் பரிமாற்றமே எரிபொருளாக இருக்கிறது. வெளிவரவிருக்கும் என் நாவல் நிழலுடைமைத்துவம் குறித்த ஒரு மாய வேடிக்கை.
ஒரு புத்தகத்தை அதன் தலைப்பில் இருந்தும் அட்டைப்படத்தில் இருந்தும் அறிமுகம் செய்வது வழக்கம். என் புத்தகத்தின் பின் அட்டையாக அமைந்திருக்கும் இந்த ஓவியத்தில் இருந்து என் அறிமுகத்தைத் தொடங்குகிறேன். நண்பர் ஹாசிப் கான் வரைந்திருக்கும் இப்படம் கதையில் வரும் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறித்தாலும் எக்காலத்திற்குமான குறியீடாக இது அமைந்திருக்கிறது.
நாவலுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று நீண்ட நாட்கள் யோசித்து ஒரு பெயர் கிடைத்தது. பல நூற்றாண்டு காலத்தை தூசு தட்டி அதை அச்சில் ஏற்றியிருக்கிறோம். வரும் திங்கள் காலை 10:30 மணிக்கு நூலின் தலைப்பும் - முகப்பும் - வெளியீட்டு தேதியும்… இப்படிக்கு, அன்புடன், கபிலன் வைரமுத்து' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா - கபிலன் வைரமுத்து நூல்கள் தேர்வு!