சென்னை: நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் ஆகியோர் நடித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான, திரைப்படம் ‘அன்னபூரணி’. அதனைத் தொடர்ந்து, ‘அன்னபூரணி’ கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
இந்த படத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக அன்னபூரணி காட்சிப்படுத்தப்பட்டு, அவர் அசைவ உணவுகளை சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதை அடுத்து, பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படத்தின் ஒரு காட்சியில் ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று ஜெய் கூறுவார். இந்த வசனத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, அன்னபூரணி படத்திற்கு எதிராக மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒடிடி தளத்திலிருந்து அன்னபூரணி படத்தை நீக்கியது. இது குறித்து பிரபல நடிகை பார்வதி திருவோத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு ஆபத்தான முன்னுதாரணம் அமைக்கப்படுகிறது. ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு, மீண்டும் அந்த படத்திலிருந்து காட்சிகளை நீக்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என அன்னபூரணி பட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும், பல்வேறு நெட்டிசன்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் அன்னபூரணி பட சர்ச்சை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களது பதிவில், “அன்னபூரணி பட சர்ச்சை சென்சார் போர்டின் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். ஒருவருக்கு படம் பிடிக்கவில்லை என்றால், அந்த படத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் ஒருவரது கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
அன்னபூரணி பட சர்ச்சைகள் குறித்து அப்படத்தின் நடிகை நயன்தாரா இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மெண்ட், விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பிற்கு அவர்களது மத கோட்பாடுகளை புன்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது. மேலும், அன்னபூரணி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே மீண்டும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் எதிர்பார்க்காத கூட்டணி… 237வது படத்தை இயக்கும் அன்பறிவு!