சென்னை: நடிகர் விக்ரம் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். அதில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் விக்ரம் தனி நாயகனாக நடித்த சமீபத்திய படங்கள் சரியாக போகாததால் விக்ரம் சற்று அப்செட் ஆக காணப்படுகிறார் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டன.
அதேநேரம், தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் தன்னால் முடிந்த வரை மெனக்கெடுவது விக்ரமின் வழக்கம். ஆனால், அப்படி மெனக்கெட்டும் சொதப்பலான திரைக்கதை காரணமாக அவரது முழு உழைப்பும் வீணாகிவிடுகிறது என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்த நிலையில், தற்போது இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ‘தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.
இதில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உள்பட பலர் நடித்து வந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரம் காயம் அடைந்தார். அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமடைந்தார். இதனிடையே, அவர் லண்டன் சென்று திரும்பினார். இதைனையடுத்து கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் ‘தங்கலான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மொத்தம் 118 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது தொடர்பாக விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, ‘படப்பிடிப்பு நிறைவடைந்தது. என்ன ஓர் அற்புதமான பயணம். அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றினேன். ஒரு நடிகராக உற்சாகமான பல அனுபவங்களை பெற்றேன். முதல் புகைப்படத்துக்கும், கடைசி படத்துக்கும் இடையே வெறும் 118 வேலை நாட்கள்தான் இடைவெளி. ஒவ்வொரு நாளும் இந்த பெருங்கனவில் வாழ வைத்ததற்கு நன்றி பா.ரஞ்சித்’ என பதிவிட்டுள்ளார்.
'தங்கலான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, உலகளாவிய திரைப்படமிது. இப்படத்தை எவ்வளவு மொழிகளில் மொழிப்பெயர்க்க முடியுமோ, அத்தனை மொழிகளிலும் மொழி பெயர்ப்போம். இந்தப் படத்தை பார்க்காத மக்களே இல்லை என்ற அளவிற்கு பல மொழிகளில் டப் செய்ய உள்ளோம் என்று முன்னர் ஒரு முறை கூறியிருந்தார். இதனால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Rajinikanth: மாமன்னன் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்!