சென்னை: தமிழ்நாடு திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர் ஹரி, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் என கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கில்லாடியாக உள்ளார். இவரது படங்கள் எப்போதுமே ஒருவித பரபரப்புடன் ஆடியன்ஸை திருப்திப்படுத்துவது போல் இருக்கும். கடைசியாக அருண் விஜய் நடித்த யானை படத்தை இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால், சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது விஷாலை வைத்து "ரத்னம்" என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே விஷால், ஹரி கூட்டணியில் தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உள்ளது. இந்த சூழ்நிலையில் "ரத்னம்" படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் விஷாலின் 34வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படத்தை "ஜீ ஸ்டூடியோஸ் சவுத்" மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது. விஷால் படத்திற்கு முதல் முறையாக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தான் இந்த படத்திற்கு "ரத்னம்" என்று பெயரிடப்பட்டு அதற்கான ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் (first shot teaser) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் OTT உரிமை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில், "அமேசான் பிரைம்" நிறுவனம் "ரத்னம்" படத்தின் OTT உரிமையை, விஷாலின் திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புகள் தற்போது திருப்பதியில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 40 வருடங்கள் மேலாக மக்கள் மனதை ஆளும் கருப்பு ஹீரோ, ஸ்டைல் சாம்ராட் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்..!