சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் "பொல்லாதவன்", "ஆடுகளம்" படங்களை, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ். கதிரேசன். இப்போது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியும் இணைந்து "அதிகாரம்" என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தை, "எதிர் நீச்சல்", "காக்கி சட்டை", "கொடி", "பட்டாஸ்" போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். தமன் இசையமைக்கிறார்.
இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். பான் இந்தியா படமாக தயாராகும் இதில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் கதிரேசன், சமூக ஊடகங்களில் வெளியான தகவல் வதந்தி என விளக்கமளித்துள்ளார். "அதிகாரம்" திரைப்படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவியதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், படப்பிடிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'வாரிசு படத்திற்கு சிக்கல் இல்லை' தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்!