தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டால் கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்!
சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்த் மார்க்கெட் அவ்வளவுதான், அதனால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை. தற்போது மார்க்கெட்டில் யார் வசூல் மன்னனாக இருக்கிறார்களோ அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து உள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு 72 வயது ஆன போதிலும் தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கிறார்கள். அப்படி உங்களுக்கும் நின்றால் தான் நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார்" என பேசியிருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், "திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டது. திரைப்பட வியாபாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு படத்துக்கும், வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பு மாறுபடும். இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையும் உயர்கிறது. அத்துடன் எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரையுலகம்.
அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இது ஒரு புதிய விதிமுறையாகும்போது வர்த்தகம் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்துக்கு உயரும் என்றும் நம்புகிறேன்" என பதிவிட்டு உள்ளார்.
எஸ்ஆர் பிரபுவின் இந்த பதிவால் ரஜினி ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அலுவலகத்தை முற்றுகையிட திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
(LGM) படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் எம்.எஸ் தோனி!
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் எல்ஜிஎம்(LGM) படக்குழுவின் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் ரசிகர்களை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண், "கோவைக்கு வருவது மிகப்பெரிய சந்தோஷம்.
எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் குடும்பங்கள் அனைவரும் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர். படதிற்கு நல்ல கருத்துக்கள் வருகிறது. படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்.
பொதுமக்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிறது. தோனி படம் என்பதால் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் என அவர்களது டீம் கூறினார்கள். நாங்கள் இந்த படத்தில் நடித்தது வெற்றியாக பார்க்கிறோம்" என்றார்.
மீண்டும் வசந்தபாலன் இயக்கதில் அர்ஜுன் தாஸ்!
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் அநீதி. கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அநீதி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட் வே சினிமாஸ் தியேட்டரில் அநீதி பட நாயகன் அர்ஜூன் தாஸ், நாயகி துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் தாஸ், "அநீதி படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதற்கு ரசிகர்களுக்கு நன்றி. வசந்தபாலன் இயக்கம், இயக்குனர் சங்கர் தயாரிப்பு, ஜி.வி.பிரகாஷ் இசை என பெரிய கூட்டணிக்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை எதிர்பார்த்தது போல தற்போது நடந்துள்ளது.
குறிப்பாக உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு நன்றி. புதிய பரிணாமத்தில் மாறுதலான கதாபாத்திரத்தில் தோன்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
விரைவில் மரகத நாணயம் இரண்டாம் பாகம்!
நினைவில் நிற்கும் மறக்க முடியாத கதைகளை உருவாக்குதல் மற்றும் ஈர்க்கும் வகையிலான கதை சொல்லல் ஆகியவை ஒரு சிறந்த இயக்குநருக்கான முக்கிய திறமைகள். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன், பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஓடிடி தளங்கள், மக்கள் என அனைவரையும் மகிழ்விக்கும் வகையிலான கதைகளை கொடுத்து வருகிறார்.
தனது அறிமுகப் படமான மரகத நாணயத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில், சரவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வீரன்’ திரைப்படமும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்த வெற்றிகரமான திரைப்படங்கள் மூலம், இயக்குநர் தற்போது பிசியான இயக்குனர்கள் பட்டியலில் இனைந்து உள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் கூறும்போது, "இயக்குநராக எனது பயணத்தை மிகுந்த அன்புடனும் வெற்றியுடனும் வளர்த்த ஒட்டுமொத்த திரையுலக நண்பர்களுக்கும், பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இப்போது வரிசையாக பல படங்களில் பிஸியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னணி நடிகர்களான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி உட்பட அதே நட்சத்திரக் குழுவைக் கொண்ட 'மரகத நாணயம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்க இருக்கிறேன். இது முடிந்தவுடன் விஷ்ணு விஷால் மற்றும் சத்யஜோதி ஃபிலிம்ஸுடன் இணைந்து ஒரு ஃபேண்டஸி படம் இயக்குகிறேன்" என்றார்.
பெண்கள் தற்காப்பு கலைகளை கற்று கொள்வது அவசியம் - நடிகர் சுமன்!
தமிழ்நாடு மாநில கராத்தே விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட டிரெடிஷனல் கராத்தே சங்கம் இணைந்து நடத்திய இந்த போட்டிகளை பிரபல நடிகரும், கராத்தே வீரருமான நடிகர் சுமன் துவக்கி வைத்தார்.
முன்னதாக செய்தியார்களிடம் பேசிய நடிகர் சுமன், "கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை பெண்கள் கற்று கொள்வது அவசியமாக இருக்கிறது. கராத்தே கற்று கொள்வதால் நமது உடல் நம்மை பாதுகாக்கும் ஆயுதமாக இருக்கும். மேலும் கராத்தே கற்று கொள்வதால் உடல் வலிமை பெறுவதோடு மனமும் வலிமை பெறும்" என்று கூறினார்.
இதையும் படிங்க : "குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை"... ரஜினியின் குட்டிக் கதை யாருக்கு?