சென்னை: இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார். இந்தப் போஸ்டரில் 'கடவுள் மட்டுமே மன்னிப்பார்' என்ற வாசகம் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. இவர்களுடன் தயாரிப்பாளர்கள் மைக்கேல் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் கூட்டாக இணைந்து ஏராளமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை ‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார்.
சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் ‘மைக்கேல்’ படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.
நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சந்தீப் கிஷனின் தோற்றம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது.
இதையும் படிங்க: உதயநிதி முன்பே அரசியல் பேசிய சிவகார்த்திகேயன்