தேனி: தமிழ் சினிமாவில் மேற்குத்தொடர்ச்சி மலை, தேன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ராசீ.தங்கதுரை (53), உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவர் 'தேன்' படத்தில் வைத்தியம் பார்ப்பவர் வேடத்தில் நடித்திருந்தார்.
ராசீ.தங்கதுரை, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ராமைய்யா- சீனியம்மாள் ஆகியோரின் பெயரின் முதல் எழுத்தை சேர்த்து ராசீ.தங்கதுரை என வைத்துக் கொண்டார். வைகை கரையில் வாழும் மனிதர்களை மையமாகக் கொண்டு “பொய்யாக் குலக்கொடி” என்ற நாவலை எழுதியுள்ளார்.
பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்து உள்ள இவர், தனது 18 வயது முதல் சிறுகதை எழுத ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு முன்னணி வார இதழ்களில் நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பத்து குறும்படங்கள், இரண்டு ஆவணப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பூச்சிக்காளை என்ற சிறுகதையைப் படித்த இயக்குநர் லெனின் பாரதி, அவர் இயக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை என்ற படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். அதில் சிறு வேடத்திலும் அவர் நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தேன் படத்திற்கும் வசனம் எழுதினார். மேலும், அமீர் இயக்கிய சந்தனத்தேவன் படத்திலும் நடித்துள்ளார். நல்ல நகைச்சுவை நடிகராக வேண்டும் என்பதே தனது ஆசையாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவகாரம்; பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!