சென்னை: நாட்டாமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அதைத்தொடர்ந்து கும்பகோணம் கோபாலு, மின்சார கண்ணா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, படையப்பா போன்ற படங்களில் முன்னனி கதாநாகர்களுடன் நடித்துள்ளார்.
இவரது மழலை பேச்சும், நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. இதன் மூலம் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். இதையடுத்து 2013ஆம் ஆண்டு வெளிவந்த விழா படம் மூலம் கதாநாகனாக அறிமுகமானார் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நீலகண்டா, அர்த்தம், அமிகோ கராஜ், ரிப்பப்பரி, இயல்வது கரவேல் முதலான படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படத்தில், விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அன்று முதல் இவர் மாஸ்டர் மகேந்திரன் என்று அழைக்கப்பட்டார்.
ப்ளாக்பஸ்டராக மாறிய ‘மாஸ்டர்’ படம் ஆந்திராவிலும் வெற்றிக்கொடி நாட்டியது. ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவருடம் வழங்கும் சந்தோஷம் விருது விழாவில், மாஸ்டர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் மகேந்திரன்.
இதுகுறித்து மாஸ்டர் மகேந்திரன் கூறியதாவது, “வளர்ந்து வரும் இளம் நடிகரான எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது. இந்த வாய்ப்பை அளித்த தளபதி விஜய் மற்றும் லோகேஷ் இருவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தக் கதாப்பாத்திரம் ரசிகர்களின் மனங்களை வென்றது. இப்போது உயரிய விருதுகளை வெல்வது இன்னும் மகிழ்ச்சி தருகிறது. இந்தக் கதாப்பாத்திரத்தை செய்வதற்கு விஜய் சேதுபதி பெரும் ஆதரவாக இருந்தார். அவரது பிறந்த நாளில் விருது வென்ற இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி” என்றார்.
இதையும் படிங்க: 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தை பார்த்து ஜேம்ஸ் கேமரூன் பாராட்டினார் - எஸ்.எஸ்.ராஜமௌலி