மும்பை: அண்மைக் காலமான சினிமா நடிகர்கள் தங்களுக்கு மொழிவாரியாக மோதிக்கொள்வது அதிகரித்துவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கர்நாடக நடிகர் கிச்சா சுதீப்பும், இந்தி நடிகர் அஜய் தேவ்கன்னும் மோதிக்கொண்டனர். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்தச் சர்ச்சை அடக்குவதற்குள் சினிமா மேடை ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ஒரு காலத்தில் இந்தி சினிமாதான், இந்திய சினிமாவாக இருந்தது. நான் கூட சில இடங்களில் வருத்தப்பட்டேன். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. இதனை பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் மாற்றியுள்ளன” என்றார்.
சினிமா வட்டாரத்தில் இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. இதற்கிடையில் மற்றொரு தெலுங்கு நடிகராக மகேஷ் பாபு, “பாலிவுட் சினிமாவால் என்னை வாங்க முடியாது” எனப் பேசினார். இந்த நிலையில் மகேஷ் பாபு இந்தி சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் மகேஷ் பாபு, “நான் சினிமாவை நேசிக்கிறேன், அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 46 வயதான மகேஷ் பாபு, 1989ஆம் ஆண்டு தனது தந்தை படமான போராட்டம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருகிறார். இவரின் நடிப்பில் சர்காரு வாரி பாட்ட என்ற படம் மே12ஆம் தேதி (அதாவது இன்று) வெளியாகிறது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் சிலரும் கருத்துகள் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தி தேசிய மொழியா? அஜய் தேவ்கன், சுதீப் ட்விட்டரில் மோதல்