முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களின் நடிப்பில் தயாராகியுள்ள டைட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஆக. 20) நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு, பாக்யராஜ், ராஜ்கபூர், நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா, ஆர்.கே.சுரேஷ், அஸ்வினி, ரோபோ சங்கர், மைம் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் ராதாரவி பேசுகையில்,"நாகேஷுக்கு எதிரி ரோபோ சங்கர் என்று யூ-ட்யூப்பில் போட்டுள்ளனர். நான் அவ்வாறு சொல்லவில்லை. நாகேஷ் போல் நன்றாக வர வேண்டும் என்றுதான் சொன்னேன். யாராக இருந்தாலும் அவர்களது படத்தின் புரொமோஷனுக்கு வர வேண்டும். நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். தயாரிப்பாளர் கொடுப்பதால்தான் அவர்கள் வாங்குகிறார்கள். தனுஷின் திருச்சிற்றம்பலம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் சரியாக விளம்பரங்கள் செய்கிறார்கள்.
மற்ற படங்களுக்கு இதுபோன்ற விளம்பரங்கள் இல்லை. கமல்ஹாசன் ஒரு பிறவிக் கலைஞன். நல்ல படங்கள் ஓடுவதில்லை என்ற செய்தி கேட்கும்போது வருத்தம் அளிக்கிறது. சிறிய படங்கள் நிறைய எடுக்க வேண்டும். சிறிய திரையரங்குகளில் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்" என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்,"சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். அப்போது தான் முழுமையான கணக்கு தயாரிப்பாளருக்கு சென்றடையும். தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் வன்முறை அதிகமாக உள்ளது" என கூறினார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில்,"சிறு முதலீட்டு படங்களை மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் கட்டாயம் திரையிட வேண்டும் என்று அரசாணை வெளியிட வேண்டும். அப்போது தான் சிறிய பட்ஜெட் படங்கள் மக்களிடம் சென்றடையும்" என்றார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்,"சிறு முதலீட்டு படங்களை மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் கட்டாயம் திரையிட வேண்டும்
என்று பாக்யராஜ் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு ஆவணம் செய்ய வேண்டும். படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்றார்.
இதையும் படிங்க: இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரோபோ சங்கர்...