கொச்சி : லியோ பட புரோமோஷனுக்காக கேரள சென்று உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜை, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் ரிலீசான நிலையில், அது முதல் வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டு இருக்கிறது. முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடியே 50 லட்ச ரூபாயை படம் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. உலக அளவில், இந்திய படம் பெற்ற அதிகபட்ச வசூல் என்றும் கூறப்பட்டு வருகிறது.
லியோ படம் வெளியாகி இன்றுடன் (அக். 24) 6 நாட்கள் ஆன நிலையில், இந்தியா முழுவதும் 250 கோடி ரூபாய் வசூலை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் ரூ.64.8 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.35.25 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.39.8 கோடியும், நான்காவது நாளில் ரூ.41.55 கோடியும், ஐந்தாவது நாளில் ரூ.35.19 கோடியும், ஆறாவது நாளில் ரூ.30.63 கோடியும் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை தாண்டி கேரளாவில் லியோ படத்திறகு பயங்கர வரவேற்பு கிடைத்து உள்ளது. கேரள விஜய் ரசிகர்கள் லியோ படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் புரோமோஷனுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேரளா சென்று உள்ளார். பாலக்காட்டில் உள்ள அரோமா திரையரங்களில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜை காண ஆயிரக்கணக்கான ரசிர்கர்கள் குவிந்தனர்.
கேரளாவில் லியோ படத்தை வெளியிட்ட கோகுலம் மூவிஸ் நிறுவனம் முன்னெச்சரிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்த போதும், கட்டுக்கடங்காமல் குவிந்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை சூழ்ந்து கொண்டனர். இதில் லோகேஷ் கனகராஜ்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் லத்தி சார்ஜ் செய்து ரசிகர்களை கலைத்தனர்.
இதைத் தொடர்ந்து, ரசிகர்களிடம் இருந்து லோகேஷ் கனகராஜ் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சூர் ராகம் திரையரங்கம் மற்றும் கொச்சி கவிதா திரையரங்கத்தில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள இருந்த நிலையில், இரண்டு விழாவும் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர் சந்திப்பும் வேறொரு நாளுக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இந்திய அளவில் ரூ.250 கோடி வசூலைத் தாண்டிய லியோ!