சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நேற்று முன்தினம் (அக் 19) வெளியான திரைப்படம், லியோ. ஆங்கிலத்தில் வெளியான 'ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்' படத்தின் தழுவலாக உருவாகியுள்ள இப்படம், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸிலும் இணைந்துள்ளது.
இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கல், தமிழக திரையரங்கில் அதிகாலை காட்சி ரத்து போன்ற சிக்கல்களைத் தாண்டி திரையரங்குகளில் படம் வெளியானது. படம் வெளியாகி முதல் நாள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், உலக அளவில் லியோ திரைப்படமே ஒரு நாளில் அதிகபட்ச வசூல் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன், அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளியான ஜவான் படம் அதிக வசூல் பெற்ற நிலையில், லியோ அதனை முறியடித்துள்ளது. படம் வெளியான ஒரு நாளில் இந்திய அளவில் ரூ.70 கோடியும், தமிழகத்தில் ரூ.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தங்கலான்' டீஸர் ரெடி..! படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்..!
பல கோடிகளை லியோ வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி இரண்டாம் நாள் வசூல் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரூ.24 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் ரூ.42 கோடியும், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் ரூ.6 கோடியும், கர்நாடகாவில் ரூ.4.5 கோடியும் வசூலித்துள்ளது.
இரண்டு நாட்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. இதன் மூலம் இரண்டே நாளில் லியோ திரைப்படம் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு மிருக தோஷமா… ’லியோ’ திரைப்பட ரிசல்ட் கூறுவது என்ன?