சென்னை: தமிழ் சினிமாவில் அழகான நடிகைகளுக்கு என எப்போதுமே தனியிடம் உண்டு. அப்படி கன்னங்குழி அழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் லைலா. 90-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர் லைலா. விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அதன்பிறகு முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், சரத்குமார், பிரசாந்த் ஆகியோர் உடன் இணைந்து நடித்துள்ளார். தில், தீனா, பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. குறிப்பாகப் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்படும் கதாபாத்திரமாக இருந்தது. அதன் பின் இறுதியாக 2006 ஆம் ஆண்டு அஜித் நடித்த திருப்பதி படத்தில் நடித்திருந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் தனது கணவருடன் செட்டியாகிவிட்டார்.
தற்போது நீண்ட வருடங்கள் கழித்து எஸ்.ஜே.சூர்யா நடித்த "வதந்தி" இணையத் தொடரின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்த வெப் சீரிஸில் யாருமே எதிர்பாராத விதமாக நெகடிவ் கதாபாத்திரத்தில் லைலா நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் "சப்தம்" (saptham) படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியிள்ளது.
க்ரைம், த்ரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் அறிவழகன் முதல் முதலில் இயங்கிய படம் ஈரம். வித்தியாசமான ஹாரர் படமாக இந்த படம் அமைந்தது. மேலும் ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு
இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் சப்தம். சமீபத்தில் இப்படத்தில் கதாநாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் இணைந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையிலும், ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமெனப் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிறது என கூறப்படுகிறது.
நடிகை லைலா இப்படத்தில் இணைந்தது குறித்தான அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: PS-2 Update: சுட சுட வெளியான பொன்னியின் செல்வன் அப்டேட்! என்ன தெரியுமா?