சென்னை: இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் "கட்டில்" திரைப்படம், நவம்பர் 24ஆம் தேதி மிக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்க, வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்னறே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, பல விருதுகளைப் பெற்றுள்ளது. அதனால் இப்படம் குறித்து மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக, இப்படத்தின் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகாவும் நாயகியாக நடித்துள்ளார். முன்னதாக இயக்குநர் கணேஷ்பாபு இயக்கிய "கருவறை" என்ற குறும்படத்தின் இசைக்காக, இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான தேதியை விருது அறிவிக்கப்பட்ட, இயக்குநர், படத்தொகுப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பி.லெனின், "கட்டில்" படத்தில் பணியாற்றி உள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு ஆகிய பணிகளை இவர் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்னரே "கட்டில்" படத்தின் பணிகள் நிறைவடைந்தது. ஆனால் அதன் பின்னர் பல சர்வதேச திரைப்பட விழா அரங்குகளில் படம் திரையிடப்பட்டு, பல விருதுகளைப் பெற்றது. இந்நிலையில் "கட்டில்" திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இப்படம் குறித்துப் பேட்டியளித்த படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, "உறவுகள் பற்றியும், நமது வீட்டில் இருக்கும் பழமையான பொருட்களுக்கும், நமக்கும் உள்ள பிணைப்பு பற்றியும் இப்படம் பேசுகிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றபோது படத்தைப் பார்த்த மற்ற மாநிலத்தவர்கள், அவர்களது மொழிகளிலும் படத்தை வெளியிடக் கேட்டுக்கொண்டனர்.
அந்தவகையில் 'கட்டில்' படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பிற மாநில மொழிகளிலும் வெளியாக உள்ளது. நான் படத்தின் கதாநாயகனாக இருந்தாலும், இப்படத்தில் 'கட்டில்' தான் உண்மையான கதாநாயகன்" என்று இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.