கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இன்று (ஜூன் 9) நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “ விக்ரம் படத்தின் இந்த வெற்றியினால், ஏற்கெனவே நீங்கள் கைவிடப்பட்ட படங்களான ‘மருதநாயகம்’, ‘மர்மயோகி’, ‘சபாஷ் நாயுடு’ திரைக்கு வர வாய்ப்புண்டா..?” எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “அது எடுக்கப்பட்டு பல காலம் ஆயிற்று. நான் சிரத்தை இல்லாமல் எதையும் செய்ய மாட்டேன். எனக்குப் புதிது புதிதாக பல படைப்புகள் செய்ய வேண்டும். அவைகள் எனக்கு பழையதாகத் தெரிகின்றன. என்னைப் பொறுத்தவரையில், அது நான் பல முறைப் பார்த்த படங்களே.
நாங்கள் பார்த்த படத்தைத் தான் உங்களுக்கு விருந்தாகப் படைக்கிறோம். அந்தப் படங்களை நான் நிறைய முறை பார்த்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. அது வெளியாக வேண்டுமென தேவைப்பட்டால் அதற்கு தயாராகவிருப்பவர்கள் வரவேண்டும். நான் மட்டும் தனியாக மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது எனக்கு அந்தப் படங்கள் சொல்லிக்கொடுத்த பாடம்” எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: வெளியானது முதல் புகைப்படம்