கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட படம் 'சபாஷ் நாயுடு'. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் இப்படம் ஆரம்பமானது. ராஜீவ்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கமல்ஹாசனே அந்த படத்தை இயக்க முடிவு செய்தார்.
2016ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இயக்குனர் ராஜீவ்குமார் படத்திலிருந்து விலகிய பிறகு படத்தின் எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பும் விலகினார். அவரது மனைவிக்கு விபத்து ஏற்பட்டதே அவர் விலகக் காரணம்.
அமெரிக்காவில் ஒரு மாத படப்பிடிப்பு நடந்த பின் படத்தின் ஒளிப்பதிவாளரை கமல் மாற்றினார். அதற்கடுத்து சென்னை திரும்பிய பின் கமல்ஹாசன் வீட்டில் விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபோன்ற சம்பவங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு அப்படியே நின்றது. லைகா நிறுவனம் 'சபாஷ் நாயுடு' படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வந்தது. இந்நிலையில் 'விக்ரம்' படத்திற்கான ஒரு பேட்டியில் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு' படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது என்றும், அப்படத்திற்கான “அறிவுசார் சொத்து உரிமை” தன்னிடமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் 'சபாஷ் நாயுடு' என்றும், ஹிந்தியில் 'சபாஷ் குண்டு' என்றும் ஆரம்பிக்கப்பட்ட படம் ஆறு வருடங்களுக்குப் பின் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'கடைசி மூன்று நிமிடங்களில் திரையரங்கை அதிரவைத்தார் சூர்யா..!' - கமல்ஹாசன்