தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விக்ரம் புகழ் பாடிவருகிறாராம், கமல். இத்தனைக்கும் இப்படத்துக்கு தமிழில் எந்தப் போட்டியும் இல்லை. ஆனால், இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் போட்டி சற்று அதிகம்தான். விக்ரம் ’பான் இந்தியா’ படம் என்று சொல்லிவிட்டதால், அதற்குத் தகுந்தாற்போல் விளம்பரப்படுத்த வேண்டுமே என்பதால் களத்தில் இறங்கியுள்ளார், கமல்.
விக்ரம் வெளியாகும் அதே நாளில் இந்தியில் அக்ஷய்குமார் நடித்துள்ள 'பிருத்விராஜ்' படமும், தெலுங்கில் அடவி சேஷ் நடித்துள்ள 'மேஜர்' படமும், மலையாளத்தில் நிவின் பாலி நடித்துள்ள 'துறைமுகம்' படமும் வெளியாக உள்ளது. இப்படி மூன்று மொழிகளில் அவர் மும்முனைத் தாக்குதலில் இருந்து சமாளித்தாக வேண்டும்.
மூன்று மொழிகளிலும் முக்கிய படங்கள் வெளியாவதால் 'விக்ரம்' படத்திற்கு, அங்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனாலும், வெளியீட்டிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் கமல்ஹாசன் மட்டுமே படத்தின் புரொமோஷனில் இறங்கியுள்ளார்.
ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக நடிக்க வேண்டியுள்ளதால், அவர்கள் 'விக்ரம்' பட புரொமோஷனில் அதிகம் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனத் தெரிவித்துவிட்டார்களாம். எனவே, கமல் மட்டுமே சுற்றிச்சுற்றி ’விக்ரம்’ படத்துக்காக பணியாற்றி வருகிறார்.