ஹைதராபாத்: நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோரும் சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோரும் சிறிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே தமன்னா நடனத்தில் வெளியான காவாலா பாடலும், ரஜினியின் ஹுக்கும் பாடலும் ரசிகர்களிடம் படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரீலிசானது முதல் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் 4 நாட்களாக வசூலில் சிறு தொய்வு கூட இல்லாமல் அதிகரித்து வருகிறது. 2 நாட்களில் இந்திய அளவில் 100 கோடி வரை வசூலித்த ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 200 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் 500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல சினிமா வலைதளத்தில், ஜெயிலர் படம் இந்திய அளவில் வெளியான முதல் நாளில் 48.35 கோடி ரூபாயும், வெள்ளியன்று ரூ. 25.75 கோடி ரூபாயும், சனியன்று 35 கோடி ரூபாயும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இணையதளத்தின் தகவலின் படி நேற்று ஞாயிறன்று 38 கோடி ரூபாயும் மொத்தமாக இந்திய அளவில் 4 நாட்களில் 147 கோடி ரூபாயும் உலக அளவில் 300 கோடி வசூலை நெருங்கும் என தெரிவித்துள்ளனர்.
நாளை சுதந்திர தின விடுமுறை நாளை முன்னிட்டு கண்டிப்பாக உலக அளவில் 300 கோடி வசூலை எட்டும் எனவும், இந்திய அளவில் 150 கோடியை எட்டும் எனவும் கணித்துள்ளனர். ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு நான்கு நாட்களில் 300 கோடியை எட்டும் இரண்டாவது தமிழ் திரைப்படம் ஜெயிலர் ஆகும்.
நெல்சன் திலீப் குமார் கடைசியாக இயக்கிய பீஸ்ட் படம் ரசிகர்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதனால் ஜெயிலர் படம் வெற்றி பெறுமா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர். ஆனால் ரஜினிகாந்த் நடித்து இரண்டு வருடத்திற்கு பின் வெளியான ஜெயிலர் படம் மூலம் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இயக்குநர் நெல்சன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் ஹிந்தி மார்க்கெட்டிலும் டெல்லி, மும்பை, குஜராத், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, ஐக்கிய அரபு எமிரெட்ஸ், மற்றும் இங்கிலாந்து நாட்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஜவான் படத்தில் நயன்தாராவின் ஹய்யோடா பாடல் நாளை வெளியீடு: ஷாருக் கொடுத்த தகவல்!