சென்னை: 'வத்திக்குச்சி' திரைப்படத்தை இயக்கிய கின்ஸ்லின் இயக்கியுள்ள திரைப்படம், டிரைவர் ஜமுனா. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி, எடிட்டர் ராமர், இயக்குநர் கின்ஸ்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் கின்ஸ்லின், 'இது ஒரு கிரைம் திரில்லர் படம். படம் முழுவதும் காருக்குள்ளே நடைபெறும். இது மிகவும் சிரமமாக இருந்தது. இதில் வசனங்கள் அதிகம் பயன்படுத்த முடியாது. ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். நடிகர்களின் நடிப்பின் மூலமே கதையைச் சொல்ல வேண்டி இருந்தது. தயாரிப்பாளர் மிகவும் உதவியாக இருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்'என்றார்.
இப்படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், 'கனாவுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் எனது படம், டிரைவர் ஜமுனா. கனா, க/பெ.ரணசிங்கம் படத்திற்குப்பிறகு பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தி வரும் படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், இக்கதை என்னை நடிக்கத்தூண்டியது.
கரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. பல்வேறு தடைகளைக்கடந்து தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிறிய படங்கள் வெளியாவது குறைந்துவிட்டது. இப்படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். இப்படத்தில் கார் சண்டை எல்லாமே நானே செய்துள்ளேன்’ என்றார்.
அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் அளித்தார். அப்போது அடுத்த நயன்தாரா நீங்கள் தானா என செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், 'நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். நான் அப்படி ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் நானாகத்தான் இருக்கிறேன். அடுத்த நயன்தாரா நான் கிடையாது. தெலுங்கில் நடித்தாலும் தமிழ் சினிமாவுக்குத் தான் எனது முக்கியத்துவம் இருக்கும். நடிப்புக்கு மொழி தடை கிடையாது’ எனப் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஐமா' த்ரில்லர் திரைப்படம் ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்..