தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல். நேற்று தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளது. அதை அறிவிக்கும் வகையிலும், புதிய திரைப்படங்களின் அறிவிப்பு குறித்தும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார், ஆரவ், ஜீவா, பிரசாந்த், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஆரி அர்ஜூனன், ஹிப் ஹாப் ஆதி, பா. விஜய், வருண், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், சுந்தர்.சி, ஏ.எல். விஜய், பேரரசு, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பேட்டியளித்த ஹிப் ஹாப் ஆதி கூறியதாவது, ''தமிழ் சினிமாவில் ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் நுழைந்துள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் நானும் ஒரு படத்தில் நடிக்கிறேன். மேலும் நிறைய திரைத்துறையில் நிறைய வேலை செய்து வருகிறேன். நான் நடித்து வரும் பி.டி சார் படம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கு முன் நான் நடித்த வீரன் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
நான் இடையில் சில காலம் 'Music entrepreneurship' துறையில் பிஹெச்டி படிக்க சென்றுவிட்டேன். இனி என்னை நீங்கள் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்று கூட அழைக்கலாம். இது நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம். எனது நண்பர்கள் நிறைய பேர் இசை நிகழ்ச்சிகள் பண்ணுகிறார்கள். எனக்கு தனி இசை நிகழ்ச்சி பண்ண வேண்டும் என்று ஆசை. அதற்காக காத்திருக்கிறேன். இந்தியாவில் நான் முதல்முறையாக இசை தொழில்முனைவோர் தொடர்பான ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.
தமிழில் அடுத்து ஆதிச்சநல்லூர் அகழாய்வு, பொருநை குறித்து ஆவணப்படம் எடுக்கப்போகிறோம். தமிழியை புத்தகமாக வெளியிட உள்ளோம். தமிழன் சார்ந்த நிகழ்வுகளை செய்து வருகிறோம். டாக்டர் பட்டம் படித்து வாங்கினாலும் அதை கோடிட்டு காட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
சினிமா என்பது வேறு, இது எனது பேஷன், அது என் படிப்பு. இடையில் படிக்கப்போனதால் நடிக்கவில்லை. தற்போது தான் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். நடிப்பு மட்டுமின்றி இசை, இயக்கம் எல்லாமே பண்ண வேண்டும். பெரிய நடிகர்களை வைத்து படத்தை இயக்கத் திட்டம் உள்ளது. ஆனால், அதற்கு நிறைய நேரம் இருக்கிறது'' எனப் பேசினார். ஹிப் ஹாப் ஆதி கடைசியாக நடித்த ‘அன்பறிவு’ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த சம்பவம் சென்னையில் தான் - காஷ்மீரிலிருந்து கிளம்பிய லியோ படக்குழு