சென்னை: தமிழ் சினிமாவில் இன்று வரைக்கும் யாராலும் அசைக்க முடியாத நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது, படங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் விதமாக இருக்கும். 'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு தற்போது, 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார்.
மேலும், இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன் லால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியை வைத்து இயக்குவதால் மனதளவில் நெல்சனுக்கு சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதனையடுத்து ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனும் பட்டியலில் உள்ளார். ஆனால், இவர்களை எல்லோரையும் மீறி இன்னொருவர் பெயர் அடிபடுகிறது. கிட்டத்தட்ட உறுதி என்கின்றனர்.
சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற பிரமாண்ட வெற்றியைக் கொடுத்த இயக்குநர் ஞானவேல் ரஜினியை இயக்குவது உறுதி என்கின்றனர். இயக்குநர் ஞானவேல் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துவிட்டது என்றும்; இதற்கான ஃப்ரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினி ஞானவேல் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்கின்றனர். இதில் ரஜினி முஸ்லிம் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஜெய்பீம்' படத்தைப் போன்றும் இப்படமும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் பழங்குடி மக்களின் வலியை ஆஸ்கர் மேடை வரை கொண்டு சென்றது. இதனால், இவர் ரஜினிகாந்தை இயக்குகிறார் என்ற செய்தி ரஜினி ரசிகர்களை கூடுதலாக உற்சாகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நடிகை ஹன்சிகா கல்யாணம்.. 'லவ் ஷாதி டிராமா' டிரெய்லர் வெளியீடு!