சென்னை: கமலநாதன் புவன் இயக்கியுள்ள 'பாய்' திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா, கதாநாயகியாக நிகிஷா, வில்லனாக தீரஜ் கெர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
'பாய்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், "இந்த பாய் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர், இயக்கியுள்ள இயக்குநர், நடித்துள்ள நடிகர்கள் வெற்றி பெற வேண்டும். உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றியை பெற்றுத் தரும்.
பாய் என்றால் சகோதரன் என்று பொருள். நாம் அனைவருமே சகோதரர்கள். இந்தப் படமும் சகோதரத்துவத்தைத்தான் பேசுகிறது. இந்த உலகத்தில் சகோதரத்துவம் வளர வேண்டும். மனிதநேயம் வளர வேண்டும். இது மாதிரி மேடைகளில் பேசும்போது எங்களுக்கு ஒளிவு மறைவு கிடையாது. வெளிப்படையாகத்தான் பேசுவோம். ஆனால் வாழ்த்த அழைக்கும்போது சுமாராக உள்ள படத்தைக் கூட வாழ்த்தி விட்டுத்தான் வருவோம். ஆனால் இதன் டிரெய்லர் நன்றாக உள்ளது” என கூறினார்
இயக்குநர் பேரரசு பேசியதாவது, “முதலில் இந்த படத்தை தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது, அதற்காக பாராட்டுகிறேன். இந்த தலைப்பை தணிக்கை குழு ஏற்று சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால், கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத்தான் இருக்கும்.
இஸ்லாமியர்களை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் பழகுவோம். எல்லாருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் இருப்பார். எங்கோ, ஏதோ ஒரு இடத்தில் மதப்பிரச்னை வந்தால், அதை அரசியலாக்கி விடுகிறார்கள். ஆனால் நாம் அப்படி நினைப்பதில்லை. படத்தில் மதம், ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம்தான் மதம். மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை.
அப்துல் கலாமை யாராவது இஸ்லாமியராகப் பார்க்கிறோமா? அவரை மனிதநேயம் உள்ள இந்தியனாகத்தான் பார்க்கிறோம். கர்மவீரர் காமராஜர் இந்துவாக பிறந்தவர்தான். ஆனால் அவரை யாராவது இந்துவாகப் பார்க்கிறோமா? மனிதநேயம் உள்ள ஒரு சிறந்த ஆட்சியாளராகத்தான் பார்க்கிறோம். மக்கள் இன்று எல்லா பிரச்னைகளையும் வெறும் செய்தியாக கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை.
எந்த திரைப்படம் சமூக பிரச்னையைச் சொல்கிறதோ, அதுவே சிறந்த படம்தான். மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம்தான். அப்படி பார்க்கும்போது பாய் மிகச்சிறந்த படம். இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். இன்று குறைந்த முதலீட்டுப் படங்களும் நன்றாக இருந்தால் ஓடுகின்றன. நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு தந்து, இதனை கொண்டாட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: “நான் படத்தைப் பார்க்கிறேன்”.. சம்பவம் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - கிளிண்ட் ஈஸ்ட்வுட் ரியாக்ஷன்!