சென்னை: படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிய பெண் தயாரிப்பாளர் மீது விக்ரம் பட துணை நடிகர் ராஜகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜகுமார், "கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் மற்றும் பல சீரியல்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளேன். கடந்த ஓராண்டிற்கு முன்பு சாலிகிராமத்தை சேர்ந்த பெண் தயாரிப்பாளரான பத்மபிரியா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது பத்மபிரியா தான் திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் தருவதாக கூறி என்னிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.50 ஆயிரம் பெற்றார். அத்துடன் என்னுடைய காரின் ஆர்.சி புத்தகத்தை வாங்கி தனியார் பைனான்ஸ் கம்பெனியில் அடமானம் வைத்து ரூ.2.11 லட்சம் பணத்தை பெற்று கொண்டார்.
ஆனால் வாய்ப்பும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் எனது காரை எடுத்து சென்று விட்டனர். அந்த காரில் என்னுடைய வீட்டு சாவி, ஏடிஎம் கார்டு, உள்ளிட்ட முக்கிய பொருள்கள் ஆவணங்கள் உள்ளன. எனவே கார் திரும்ப கிடைத்தால் மட்டுமே என்னுடைய பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது போலீசார் என்னுடைய புகாரை வாங்காமல் அலைக்கழித்தனர். எனது பணத்தை பெற்று தரவேண்டும் என்றார்.
இதையும் படிப்க்க:பானிபூரிக் கடையில் காசு தராததால் தகராறு ; பானிபூரி வியாபாரி கொலை