சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் விஜய் நடித்துள்ள உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. மாஸ்டர் படத்திற்குப் பிறகு இருவரும் இரண்டாவது முறை கூட்டணி சேர்ந்துள்ளதால் லியோ படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு (LCU) யுனிவர்சில் இணையுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. லியோ படத்தின் திரைக்கதையில் முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதி விறுவிறுப்பு குறைவாக இருப்பதாகவும், வில்லன் கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையாக இல்லை எனவும், தொழில்நுட்ப ரீதியாகப் படம் நன்றாக உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. இனி ஹாலிவுட் நம்மைத் தேடி வரும் என்று ஒரு தெரிவித்துள்ளனர். சாண்டி, மன்சூர் அலிகான் நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் தான். ஆனால் வன்முறை அதிகம் இருப்பதால் குழந்தைகள் பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு படத்தின் எதிர்பார்ப்பு பற்றிக் கூறிய போது, ”காலையிலிருந்து நான் தூங்கவே இல்லை. நேற்று விநியோகஸ்தர் இடையே இருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு இன்று படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் நன்றாக உள்ளது.
ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தைப் பார்த்தனர். அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் நிலவரம் குறித்துத் தெரிய வரும். தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருவதால் லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Leo Release: கேரளாவில் 'அடிபோலி' போட்ட லியோ!