கடந்த ஜன.11ஆம் தேதி ஒரே நாளில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'வாரிசு' (Varisu) மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது 'துணிவு' (Thunivu) படம். இவ்விரு படங்களுக்கும் ரசிகர்களும் பயங்கர வரவேற்பு அளித்திருந்த நிலையில், இரண்டு படங்களும் வர்த்தக ரிதீயாக நல்ல வசூலை ஈட்டியது. முன்னதாக, இரு படங்களின் டிரெய்லர் முதல் முதல் காட்சி வரை இரண்டு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சில மோதல் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்தேறின. வாரிசு படம் ரசிகர்கள் அளித்த வரவேற்பினால் 3 நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவைகளெல்லாம் ஒரு புறமிருக்க, விஜய்யின் 'வாரிசு' படத்தின் சக்ஸஸ் மீட் இன்று (ஜன.16) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, சரத்குமார், ஷ்யாம், சங்கீதா, இசை அமைத்துள்ளார் தமன், விவேக், எடிட்டர் பிரவீன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விழா மேடையில் பேசிய இயக்குநர் வம்சி, 'இந்தப் படத்தின் வெற்றியை சுனில் பாபு சாருக்கு சமர்பிக்கிறேன். வாரிசு ஒரு படம் இல்லை. இது ஒரு நம்பிக்கை. தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கை. தயாரிப்பாளர் தில் ராஜூ என் மீது வைத்த நம்பிக்கை. இந்த படத்தின் டீம் என்மேல் வைத்த நம்பிக்கை. தமிழ் மக்களும் விஜய் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து என்னை ஜெயிக்க வைத்திருக்கிறீர்கள். இதனால், தமிழ் மக்கள் அனைவருக்கும் நான் இரு கரம்கூப்பி வணங்குகிறேன்.
ஒரு நம்பிக்கைதான் முக்கியமான எமோஷன். இந்தப் படத்தின் கதையை விஜய் சாருக்கு சொல்லும்போது மேலும் டெவலப் பண்ணுங்க என்று சொன்னார். அதன்பிறகு கதையை முழுவதும் அவரிடம் சொல்லும்போது, இந்தப் படம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றேன். இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்து தெலுங்கு டைரக்டர் என்ற விமர்சனம் வந்துகொண்டே இருந்தது. அந்த வார்த்தை என்னை பாதித்தது. ஆனால், தமிழ் ஆளோ (அ) தெலுங்கு ஆளோ இல்லை. முதலில் நான் ஒரு மனிதன். அதேபோல், தமிழ் மக்கள் ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருக்கிறேன். தமிழ் மக்கள் நெஞ்சில் ஒரு சிறிய இடம் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். எனக்கு அது போதும்' என்று பேசினார்.
இவரைத்தொடர்ந்து பேசிய விடிவி கணேஷ், 'தமிழ் மக்கள் திறமையாளர்களை கொண்டாடுவார்கள். எனவே இயக்குநர் வம்சி கவலைப்பட வேண்டாம். போக்கிரி படத்திற்கு பிறகு விஜயின் ரசிகனாகி விட்டேன். பேசும் போது அது இது என்றுசொல்லாதீர்கள், வம்சி. அது ஆடு, மாடுகளை அழைப்பது. அவர்கள் இவர்கள் என்று கூறுங்கள். இல்லை, என்றால் தமிழர்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள்' என்றார்.
இவரைத்தொடர்ந்து பேசிய கவிஞர் விவேக், 'விஜய்க்கு நன்றி. படத்தில் ரொம்ப இளமையாக இருந்தார் விஜய்' என்றார். அடுத்ததாக பேசிய தமன், 'இந்த வெற்றிக்காக 27 ஆண்டுகள் போராடி உள்ளோம். இயக்குநர் வம்சி பயங்கர கோபக்காரர். எமோஷனல் வெற்றி பெறும் என்று வம்சி நம்பினார். பாடல்களின் வெற்றிக்கு, விவேக் தான் பாதி காரணம். விஜய் ஒன்றரை நிமிடம் ஒரே ஷாட்டில் சிறப்பாக ஆடினார்' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஷாம், 'விஜய் மற்றவர்கள் பற்றி தவறாக ஒருநாளும் பேசியதில்லை. பேசுவதையும் கேட்க மாட்டார். நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த மனிதநேயர் விஜய். படத்தை பார்த்து விட்டு பலரும் எனக்கு போன் செய்து பாராட்டினார்கள்' என்றார்.
இவருக்கு அடுத்தபடியாக பேசிய தில் ராஜூ, 'இந்த கதையை விஜயிடம் சொல்லும்போது ஒருதடவை சொன்னபோதே ஒப்புக்கொண்டார். சில படங்கள் பண்ணும்போது பணம் வரும். சில படங்களுக்கு பாராட்டு வரும். ஆனால், வாரிசு படத்துக்கு இந்த இரண்டுமே கிடைத்தது. எல்லோரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நன்றி' என்றார்.
தொடக்கத்தில், விழா மேடையில் சரத்குமாரின் வருகைக்கு முன் ரூ.1000 கோடி உள்ளதாக தொகுப்பாளர் பேசியதற்கு பதிலளித்து பேசத் தொடங்கிய நடிகர் சரத்குமார், 'முதலில் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரூ.1000 கோடி என்னிடம் இல்லை. மீண்டும் வருமான வரி ரெய்டு வந்துவிடப் போகிறது. சினிமாவுக்கு மொழி கிடையாது. மொழி தெரியாதவர்கள் தவறாக பேசுவது வேண்டுமென்றே பேசுகிறார்கள் என்று ஆகாது.
வம்சி நீங்கள் யாருக்கும் தெளிவுபடுத்த தேவையில்லை. ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது (Golden Globe Award 2022) கிடைத்துள்ளது. வாழ்த்துகள். வாரிசு படத்தால் நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்துள்ளோம். படத்தில் என்னை இறந்தது போல் காட்டாமல் இருந்ததற்கு நன்றி' என்று தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: ராமோஜி ராவ்விற்கு நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் கீரவாணி