சென்னை: உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர் ஆக இருந்து, பின்னர் படங்களை தயாரித்து நடிகரான உருவெடுத்தவர். சில படங்களில் நடித்து வந்த அவருக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்ததால் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இதனால் சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் "மாமன்னன்" (maamannan)திரைப்படம் தான் உதயநிதியின் கடைசி படமாகும் எனவும் அறிவித்தார்.
இந்த நிலையில் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் "கண்ணை நம்பாதே" (Kannai Nambathey) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா உள்ளிட்டோர் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். மு.மாறன் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கூறும் போது, "இந்த படம் தாமதமாக எடுக்கப்பட்ட படமல்ல. கரோனா காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதன் பிறகு முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்டோம். அதற்காக எனது தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் உதயநிதிக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளதாக கூறமுடியாது. அனைவருக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதியும் இதைத்தான் விரும்பினார்.
இப்படத்தில் வரும் அனைத்து சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனை தான். படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாஜக பற்றிய வசனங்கள் காமெடிக்காக வைக்கப்பட்டது தான், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஆட்சேபனையான வசனமாக இருந்தால் சென்சார் போர்டு இதனை வைக்க விட்டிருக்க மாட்டார்கள் என்றார்.
படத்தின் ஒரு காட்சியில் நடிகர் உதயநிதியை பார்த்து ஒரு கதாபாத்திரம் 'அம்மா இருக்காங்க என்று பொய் சொல்லி என் வீட்டில் குடியிருந்திருக்க' என்று கேட்கும், அதற்கு நடிகர் சதீஷ் அம்மா இருக்காங்கனு 75 நாள் சொல்லலையா என்பார். மற்றொரு காட்சியில் உதயநிதி நடிகர் பிரசன்னாவை பார்த்து நீ ஜி ஜி-னு சொல்லும் போதே உன்ன நம்பியிருக்க கூடாது என்பார். இந்த வசனம் பாஜகவினரை தாக்குவது போல் உள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து இருந்தனர்" எனக் கூறினார். மேலும் "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல்லு கூட துலக்காமல் குடிச்சா எப்படி விழிப்புணர்வு ஏற்படும் - டி.ராஜேந்தர் தடாலடி