தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, தனது படங்களின் மூலம் கிராமத்து வாசனையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவர் இயக்கிய படங்களில் மண் வாசனை வீசும். தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார், இயக்குநர் பாரதிராஜா.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது முதிர்வு காரணமாகவும் நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அவர் நலமுடன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும் அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உண்மையை சமூகத்திற்கு பயமில்லாமல் படமாக எடுக்க நினைப்பேன்... பா. இரஞ்சித்