நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ’எண்ணித்துணிக’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(ஜூலை 23) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜாக்குவார் தங்கம், இயக்குனர் ஆர்வி.உதயகுமார், தமிழ், மாரிமுத்து, மிர்ச்சி சிவா, வசந்த், ஜெய், அதுல்யா, சாம் சிஎஸ், விருமாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெய், “ இசையமைப்பாளர் சாம் சி.எஸ் சிறப்பான இசையை கொடுத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். இப்படத்தில் அனைவரும் இதயப்பூர்வமாக பணிபுரிந்துள்ளனர். இப்படத்தில் நான் நன்றாக நடித்துள்ளேன் என்றால் அதற்கு காரணம் இயக்குனர் தான் ” என தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் மிர்ச்சி சிவா, “ஜெய் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்துவிட்டார் என்று எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும். ஆர்வி.உதயகுமார் சொன்னார், நான் காமெடி படம் மட்டும்தான் நடிப்பேன் என்று, தயாரிப்பாளர் தயார் என்றால் சீரியஸான படமும் நடிக்க நான் ரெடி. பகலில் ஆடியோ வெளியீட்டு விழா வைத்தால் எங்க கேங்ல யாரும் வரமாட்டார்கள். இரவு 10 மணிக்கு வைத்தால் எல்லோரும் வருவார்கள்” என்றார்.
இயக்குநர் ஆர்வி.உதயகுமார் பேசுகையில், ”நடிகர் சூர்யாவை முதன்முதலில் நடிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். பின்பு மிகவும் முயற்சி செய்து சூர்யாவை நடிக்க வைத்தோம்.
அப்படி உருவானவர்கள்தான் எல்லா நடிகர்களும். ஆரம்பத்தில் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் சினிமாவே வேண்டாம் என்றார் சூர்யா. பிறகு ’நந்தா’ படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து மிகப்பெரிய நடிகன் என சூர்யா நிரூபித்தார். சூர்யாவுக்கு இந்த தேசிய விருது எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தேசிய விருது நல்ல திரைப்படங்களில் நடிக்க ஊக்கமளிக்கிறது' - நடிகர் சூர்யா