சென்னை : தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குநர்கள் தனது முதல் படத்தில் இருந்தே சமூகத்திற்கு தேவையான கருத்துகளை தங்களது கதை மூலம் சொல்லி ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில் இயக்குநர் மாரி செல்வராஜும் ஒருவர். இவரது படங்களில் சமூக நீதி கருத்துகள் அதிகம் இருக்கும்.
மாமன்னன் படத்தில் பட்டியலினத்தை சேர்ந்த எம்எல்ஏ, எப்படி தான் சார்ந்த கட்சியில் நடத்தப்படுகிறார் என்பதை காட்டியிருந்தார். இதில் வடிவேலுவின் நடிப்பு பேசப்பட்டது. தற்போது மாரி செல்வராஜ் வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் இப்படம் உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டது என முதலில் கூறப்பட்டது. பின்னர் அது பிரபல முன்னாள் இந்திய கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது என தெரிய வந்துள்ளது.
மேலும் இப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே 60 நாட்களுக்கு மேலாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வரும் துருவ், தற்போது இறுதிக் கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மணத்தி கணேசே பயிற்சி அளித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டுக்கும் மேலாக இந்திய அணிக்காக கபடி விளையாடிய இவருக்கு மத்திய அரசு கடந்த 1995ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது. கபடி விளையாட்டுக்காக அர்ஜுனா விருது பெற்ற இரண்டாவது தமிழ்நாடு வீரர் மணத்தி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரன்பீர் கபூரின் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷனில் வெளியான அனிமல் திரைப்படம்..! ரசிகர்கள் வரவேற்பு!