நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்திருக்கும் திரைப்படம் 'நானே வருவேன்'. இருவரும் 2011இல் ’மயக்கம் என்ன’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். பின்பு இருவரும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் இணைவதாக போஸ்டர்கள் வெளியான நிலையில் அப்படத்தின் பணிகள் தாமதமானது.
இந்த நிலையில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் - செல்வராகவன் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இம்மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கூட்டுவதற்காக வரும் 15ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியிடப்பட உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.