தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர நடிகராக இருப்பவர், தனுஷ். இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். குறிப்பாக இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரியில் இருவரும் பிரிவதாகக்கூறி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "18 ஆண்டுகாலமாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாழ்ந்து வந்தோம். இன்று நாங்கள் ஒரு மனதாக பிரிந்துவாழ முடிவு செய்துள்ளோம்.
எங்களது முடிவை மதித்து, இதனை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு தனியுரிமையை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். இதேபோன்ற பதிவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த செய்தி திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜினியும் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது.
இருவரும் பிரிந்து இருந்தாலும் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. எனவே, இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அது எதுவும் உண்மையில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இருவருமே தங்களது மகன்களுக்காக இணையப்போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் பிரிந்தது, பிரிந்தது தான் என்று இருவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். மகன்களுக்காக மட்டும் தேவையான இடங்களில் இணைந்து வருவார்கள் என்றும்; அதன்பிறகு பிரிந்தே தான் இருப்பார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படிங்க: "சாட்டர்டே இஸ் கம்மிங்கு..." - முதல்முறையாக சொந்தக் குரலில் பாடல் பாடிய சந்தானம்!