சென்னை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம், நடிகர் விஜய்க்கு அனுப்பியுள்ள சட்ட அறிவிப்பு நோட்டீஸில், தமிழக அரசும், காவல்துறையும் போதைப் பொருட்களுக்கு எதிராக இளைஞர்களிடையே தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் விஜய் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள "லியோ" படத்தில் நான் வரவா என்ற பாடல், ஜூன் 22ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்பாடலில் புகைப்பிடித்துக் கொண்டே ரவுடிசத்துக்கு ஆதரவாகவும் விஜய் நடித்துள்ளார்.
இந்த பாடல் இளைஞர்களை போதைப்பழக்கம் மற்றும் தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது. அதனால், நடிகர் விஜய் மற்றும் பாடல் வெளியீட்டாளர்கள் மீது ஏன் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரக் கூடாது என விளக்கமளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அவர் நடிகர் விஜய்க்கு அனுப்பி உள்ள நோட்டீஸில், “நடிகர் விஜய், தங்கள் படத்தில் வரும் பாடல் குறித்து எனது புகார் கோரிக்கை மனுவினை கடந்த 25.06.2023 தேதியன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளேன். நாட்டில் நடக்கக் கூடிய நல்லவை கெட்டவை அனைத்துக்கும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு கண்டு வருகிறோம். தற்போது தமிழக அரசும், காவல்துறையும் போதைத் தடுப்பு விழிப்புணர்வு செய்து பல குற்ற செயல்களைத் தடுத்து வருகிறார்கள்.
போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் மற்றும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும், ஆதரிக்கும் வகையிலும், நீங்கள் நடிக்கும் லியோ படத்தில் அண்ணன் 'நான் வரவா நான் ரெடியா இருக்கேன்; தனியா வரவா' என்ற பாடல் வரிகள் உள்ளன. உங்கள் பிள்ளைகளுக்கும் மற்ற இளைஞர்களுக்கும் சமுதாயத்தில் சீர்குலைவு ஏற்படுத்தும் வகையிலும் போதைப்பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே போதைத் தடுப்புச் சட்டம் 1985, போதைப் பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள அளிக்கப்பட்ட இந்த சட்ட அறிவிப்பு நோட்டீஸ் படி விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் தமிழக முதலமைச்சர் சமீபத்தில் போதைப் பொருளை ஆதரிக்கும் நபர்களையும், போதைப் பொருட்கள் தடுப்பில் கடமை தவறும் அதிகாரிகள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்தார்.
ரவுடிசத்தை தூண்டுதல், போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையில் தூண்டி விடுதல், என உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி வழங்கப்பட்ட சட்ட அறிவிப்பு நோட்டீசிற்கு பதில் அளிக்கத்தவறும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டம் - 1860 இன் 166வது பிரிவு படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் ஆகும்” எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்கத் தவறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர போவதாகவும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வேலை இழப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.