தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் ஒன்று நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் மரண வெயிட்டிங்கில் இருக்கும் படமாக லியோ இருந்து வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் இருந்து ‘நா ரெடி’ என்ற பாடல் அனிருத் இசையில் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய்யே பாடியிருந்த இந்தப் பாடலில் புகை மற்றும் மது பழக்க வழக்கங்களை பற்றிய வரிகள் இடம் பெற்று இருந்தன.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே போதைப் பொருள்கள் இருக்கும் என்பது தெரிந்த விஷயமே. ஆனால் இந்த பாடலில் வரம்பு மீறிய போதைப் பொருள் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், லியோ படத்தில் வரும் ‘நா ரெடி’ பாடலில் போதைப் பொருள்களை ஆதரிக்கும் வகையில் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில், " நடிகர் விஜய் பாடிய ‘நா ரெடி’ என்ற பாடல் வரிகளில், சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் செயல்கள், இளைஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தில் போதைப் பொருள்களை ஆதரிக்கும் வகையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985 போதைப் பொருள்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார். தொடர்ந்து, இந்த பாடலுக்கு அனைத்து மக்கள் கட்சி அரசியல் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது, பாடலில் இடம் பெற்ற “பத்தாது பாட்டிலு நா குடிக்க.. அண்டாவ கொண்ட சியர்ஸ் அடிக்க.. பத்த வச்சி புகையை விட்டா பவர் கிக்கு.. புகையில பவர் கிக்கு.. மில்லி உள்ள போனா போதும்.. கில்லி வெளியே வருவான் உள்ளிட்ட வரிகள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பெரிய எழுத்துக்களில் ‘புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு’ என்று இடம் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த நடவடிக்கை குறித்து ராஜேஸ்வரி பிரியா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது. தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. உண்மை பணத்தைவிட வலிமையானது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'RRR' படத்தைப் பாராட்டிய பிரேசில் அதிபர் லூலா - நன்றி தெரிவித்த ராஜமௌலி!