சென்னை: நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் 'தக்ஸ்'. இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ' தக்ஸ் 'படத்தில் சண்டை பயிற்சி இயக்குநர்களான ராஜசேகர் மற்றும் ஃபோனீக்ஸ் பிரபு ஆகிய இருவரும் பணியாற்றியிருக்கிறார்கள்.
தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருள்செலவில் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றியைப் பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது.
இப்படத்தின் படபிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி என பல்வேறு இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜுன் 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டு, படபிடிப்பு தொடங்கியது.
இதையும் படிங்க: முன்கூட்டியே வருகிறான் விருமன்!