சென்னை: இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள திரைப்படம் பார்டர். ஆல் இன் ஒன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அருண் விஜய், ரெஜினா கெசண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் காட்சிகளை ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி இத்திரைப்படத்தினை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் தேசிய அளவிலான திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 புரொடக்சனைச் சார்ந்த டாக்டர் பிரபு திலக் கூறுகையில் , “தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அருண் விஜயின் பார்டர் படத்தை 11:11 புரொடக்சன் சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம். சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து காரணிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது .
தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய்யின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச் சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார். சமீபத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை மற்றும் தமிழ் ராக்கர்ஸ் இணைய தொடர் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடிடியில் சாதனை படைத்த யானை