சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, தனது 16 வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களின் மூலம் கிராமத்து வாசனையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவர் இயக்கிய படங்களில் மண் வாசனை வீசும். தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் பாரதிராஜா.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாகவும் நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.எம் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று பாரதிராஜா அனுமதிக்கப்படுகிறார். இதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி.சண்முகம் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: வெளியானது பகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக்