சென்னை: இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நடிகை சிந்து (44). அங்காடித் தெரு படத்தில் ஒரு காட்சியில் தெரு வியாபாரியிடம் பேசும் காட்சியில் நடிகை சிந்துவின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
அதற்கு பின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகை சிந்து கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
மேலும் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன் சிந்து வெளியிட்டுள்ள பதிவில், ''என்னை சாகடித்து விடு, அல்லது நிம்மதியாக வாழவிடு என்று கடவுளை தினமும் கேட்கிறேன். தினமும் கொடுமையை அனுபவித்து கொண்டிருக்கிறேன். மேலும் என் கூட இருப்பவர்களையும் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கேன்சருக்கு மருந்தே கிடையாது. நான் பயாப்சி செய்ததால் கேன்சர் கட்டிகள் பரவியது. பின்னர் மேலும் பரவாமல் இருக்க ஒரு பக்க மார்பகத்தை சிகிச்சை மூலம் அகற்றினர்'' என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: வெளியானது ‘புலிமடா’ படத்தின் டைட்டில் போஸ்டர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்நிலையில் நடிகை சிந்துவின் இறுதிச்சடங்கு இன்று மாலை விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெறுகிறது. மேலும் அங்காடித் தெரு படத்தில் நடிகை சிந்துவுடன் நடித்த நடிகர்கள் கொட்டாச்சி, பாண்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை சிந்து சென்னையில் 2015இல் கனமழையால் வெள்ளம் ஏற்பட்ட போதும், கரோனா காலகட்டத்திலும் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், நடிகர்கள் விவேக், மயில்சாமி, மனோபாலா எனப் பல பிரபலங்கள் தொடர்ச்சியாக இறந்து வருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Jailer Pre-Booking: விறுவிறுப்பான முன்பதிவில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்!