சென்னை: நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். அவரது நடிப்பும் நடனத் திறமையும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. கமல், அஜித், விஜய், பிரசாந்த் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். இவர் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கி நடித்து வருகிறார். ரஜினியின் 'பேட்ட' படத்தில் நடித்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.
இந்த நிலையில் அறிவழகன் இயக்கி வரும் 'சப்தம்' என்ற படத்தில் லைலாவுடன் இணைந்து சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன், படங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் சிம்ரன், லைலா கூட்டணி இணைந்துள்ளது. தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில், திரையில் இணைந்து தோன்றவுள்ளார்கள். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சப்தம் படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளார்.
இயக்குநர் அறிவழகன் ஈரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே ஹாரர் த்ரில்லர் கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு த்ரில்லர் விருந்து படைத்தவர். தற்போது சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஈரம் படத்தில் நடித்த ஆதியுடன் சப்தம் படத்திலும் இணைகிறார். ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, தமன் வெற்றிக் கூட்டணி இதில் மீண்டும் இணைந்துள்ளது.
சப்தம் படம் இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் தன் புதிய பயணத்தை தொடங்கியுள்ள இயக்குநர் அறிவழகன் Aalpha Frames நிறுவனம் சார்பில், 7G Films நிறுவனத்தின் தயாரிப்பாளர் சிவா உடன் இணைந்து, இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சப்தம் படத்தில் நாயகியாக, நடிகை லஷ்மி மேனன் இணைந்தார். தற்போது நடிகை லைலாவுடன் சிம்ரனும் இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. லைலாவும், சிம்ரனும் முன்னதாக பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியானது. பிரசாந்த், லைலா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரசாந்த்தும் லைலாவும் காதலிக்கும் நிலையில், பிரசாந்த்தின் தோழியான சிம்ரன் அவரை ஒருதலையாக காதலிப்பார். இப்படத்தில் சிம்ரன் வில்லத்தனத்துடன் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். ஹீரோக்கள் மட்டுமல்ல ஹீரோயின்களும் நெகட்டிவ் ரோலில் பட்டையைக் கிளப்புவார்கள் என்று சிம்ரன் நிரூபித்தார். அவரது வில்லத்தனம் வெகுவாக ரசிக்க வைத்தது. இப்படத்தில் சிம்ரன் தனது நடிப்பை மிகவும் ஸ்டாரங்காகப் பதிவு செய்திருந்தார். தற்போது சிம்ரன் - லைலா கூட்டணி மீண்டும் திரையில் தோன்றவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மாஸ் லுக்கில் சிம்பு ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!