வாரணாசி: பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே தற்கொலை வழக்கில் அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், போஜ்புரி பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் மீது சாராநாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து இருவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகை அகன்ஷா துபே அங்குள்ள ஹோட்டலில் தங்கிருந்த நிலையில் நேற்று (மார்ச் 26) தற்கொலை செய்து கொண்டார்.
ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் அகன்ஷா துபேவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருடன் சென்றிந்த படக்குழுவின் உடன் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகை அகன்ஷா துபேவின் குடும்பத்தார், போஜ்புரி பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அதோடு சாராநாத் போலீசாரிடம் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையிலேயே தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாடகர் சமர் சிங் - அகன்ஷா துபே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது மகளை துன்புறுத்தி வந்ததாக அகன்ஷாவின் தாயார் குற்றம்சாட்டி உள்ளார்.
நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் இரவு கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், கண்ணாடி முன் நடனமாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைத்தொடர்ந்து அன்றிரவே தற்கொலை செய்து கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் போஜ்புரி திரையுலகில் மாடலாகவும், நடிகையாகவும் வலம் வந்தார்.
சமர் சிங், கேசரி லால் யாதவ், பவன் சிங் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி அகன்ஷா துபே பிறந்தார். பள்ளிப் பருவம் முதலே நடனத்தின் மீதும், நடிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிடுவதில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமடைந்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. அதன் பின் மாடல், நடிகை என உருமாறினர். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி கேட்டு மனைவி மீது மானநஷ்ட வழக்கு போட்ட நவாசுதீன் சித்திக்