தமிழ் சினிமாவின் பெருமை எனப் போற்றப்படுபவர் வைகைப் புயல், வடிவேலு. ஏராளமான கதாபாத்திரங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்தவருக்கு, இடையில் சில பிரச்னைகள் காரணமாக நடிப்பில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் வடிவேலு ரிட்டர்ன் ஆகியுள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
லைகா தயாரித்துள்ள இப்படம் இன்று (டிச.9) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவரும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அதுவும் படம் பார்ப்பவர்களை விட யூடியூப் ரிவியூவர்கள் தான் எல்லா திரையரங்குகளிலும் நிறைந்துள்ளனர். மழையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை திரையில் காணும் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் வடிவேலு படம் என்பதால் வரும் நாட்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயலால் வைகைப் புயலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமான ஒன்றுதான்.
இதையும் படிங்க:நடிகர் விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; காரணம் என்ன?