சென்னை: சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் சிம்புவின் ஒல்லியான தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல் இப்படத்தில் பாடலாசிரியர் தாமரை எழுதி, மதுஶ்ரீ பாடியிருந்த மல்லிப்பூ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் படத்தில் நடித்து வந்தார். 'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மஃப்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் இந்த மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீஸர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் கிருஷ்ணா, பத்து தல திரைப்படம் மஃப்டி படத்தின் முழுமையான தழுவலாக இருக்காது என்றும், அதில் 90 சதவீதம் மாற்றியுள்ளோம் என்றும் கூறினார்.
பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். சிம்புவின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவில் இந்த பாடல் வெளியானது. 'அக்கரயில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்' எனத் தொடங்கும் இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலானது.
இரண்டாவது சிங்களான 'நினைவிருக்கா' என்ற பாடல் நேற்று(மார்ச்.14) வெளியானது. கபிலன் எழுதிய இந்த பாடலை ஏஆர் அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் சூப்பர் மெலடியாக உருவாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் முன்னாள் காதலர்களின் உணர்வுகளை கூறும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில், பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் நடந்தபோது அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதுபோன்று நடக்காத மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிம்புவை பார்க்க அவரது ரசிகர்கள் உள்ளே நுழைய முந்துவார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.