சென்னை: ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அருண் மாதேஸ்வரன், சத்யஜோதி தியாகராஜன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பேசும் போது, “தியாகராஜன் போல தயாரிப்பாளர் இருந்தால் தான் திரைத்துறை நன்றாக இருக்கும். தனுஷ் சர்வதேச விருதுகளை வாங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “இது எங்கள் குடும்ப நிகழ்ச்சி. தனுஷ் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். இந்த படத்தின் அவரது லுக் பார்த்து பயமா இருக்கு என்ன பண்ணப்போறார் என்று. கர்ணனுக்கு பிறகு தனுஷுடன் படம் பண்ண இருந்தேன். நான் வேறுபடம் பண்ண போனபோது சரி என்றார். அவருக்கு என் மீது நம்பிக்கை கூடிக்கொண்டே போகிறது அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். கர்ணன் படத்தில் பசியுடன் வேலை வாங்கினேன்.
கேப்டன் மில்லர் போன்ற இரையை உங்களுக்கு கொடுக்க நினைக்கிறேன். ராக்கி, சாணிக்காயிதம் வெளியாகாத போதே அருணுடன் வேலை செய்ய உள்ளதாக தனுஷ் சொன்னார். கடின உழைப்புடன் வேலை செய்தால் தனுஷ் உங்களுடன் படம் பண்ணுவார். திலீப் இந்த படத்துக்கு 100 நாட்கள் தேதி கொடுத்துள்ளார். எனக்கு கூட அத்தனை நாட்கள் தரவில்லை. அத்தனை வேலை இப்படத்தில் உள்ளது.
தனுஷ் இப்படத்தை அவ்வளவு நம்புகிறார். கமர்ஷியல் அந்தஸ்து உள்ள நாயகன் சாதாரண சிறிய படத்தை பார்த்து பேசுவார். சிறிய படங்கள் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணரக்கூடியவர். தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது தனுஷ் தான் உடனே போன் செய்தார். நீங்கள் நல்ல வேலை செய்து வருகிறீர்கள் சூப்பர் என்றார். ரொம்ப பெருமையாக இருப்பதாக சொன்னார். கேப்டன் மில்லர் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பேசும் போது, “இது என் மனதுக்கு பிடித்தமான படம். எனக்கு வரலாறு படங்கள் மிகவும் பிடிக்கும். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு துறையும் அத்தனை ஆய்வு மற்றும் உழைப்பு போட்டு எடுத்துள்ளனர். எனக்கு துப்பாக்கியில் சுடத் தெரியாது. அதற்கு பயிற்சி கொடுத்தனர். கேமரா எங்க இருக்கும் என்றே தெரியாது. அத்தனை பேருக்கும் உடை தயார் செய்வது மிகவும் கடினம். கோயில் செட்டும் அத்தனை தத்ரூபமாக இருந்தது.
இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. கேப்டன் மில்லர் போன்ற ஒரு பெரிய படத்தை தயாரிப்பது சுலபமல்ல. சத்யஜோதி நிறுவனத்திற்கு நன்றி. ஜிவியின் பின்னணி இசையை கேட்க ஆர்வமாக இருக்கிறேன். அருண் மாதேஸ்வரன் ரொம்பவும் சீரியஸான நபர் என்று நினைக்கின்றனர். மிகவும் ஜாலியான மனிதர். மிக பயங்கரமான தியேட்டர் அனுபவம் உங்களுக்கு வரப்போகிறது. நான் தனுஷின் ரசிகை. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.
நடிக்கும் போது என்ன ஒரு நடிகர் என்று தோன்றும். ஒன்றரை வருடங்களாக தாடி, மீசையுடன் இருப்பது சுலபமல்ல. எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. பாடகர் தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது குரலில் இளையராஜாவின் டச் இருக்கும். அவர் பாடிய மேகம் கருங்காதா என்ற பாட்டு பிடிக்கும். அடுத்து அவருடன் காதல் படம் நடிக்க ஆசை. தாடியுடன் இருக்கும் தனுஷ் தான் எனக்கு பிடிக்கும். செல்வராகவன் நடிப்பும் எனக்கு பிடிக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பேசும் போது, “தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பெருமைப்படும் படமாக கேப்டன் மில்லர் இருக்கும். தனுஷ் பயங்கரமாக உழைத்துள்ளார். சில படங்கள் பண்ணும்போது உள்ளே சந்தோஷமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம் போல இப்படமும் ஆக்சன் நிறைந்த படம். அருண் மாதேஸ்வரனே ஒரு சண்டை பயிற்சியாளர் போல தான். பின்னணி இசை மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சத்யஜோதிக்கு நன்றி நல்ல படத்தை தயாரித்ததற்கு. பெருமைப்படும் படமாக இருக்கும். பொல்லாதவன் படத்தில் இருந்து தொடங்கினோம். ஒவ்வொரு முறையும் விருது அறிவிக்கும் போது உங்களுக்கு கிடைக்கும் என்று தனுஷிடம் சொன்னேன். ஆடுகளம் படத்திற்கு விருது கிடைத்தது. அதன்பிறகு சினிமாவே எங்களை திரும்பி பார்த்தது. ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் வித்தியாசம் காட்டினார். இப்படத்தில் இவர் துப்பாக்கி எடுத்து சுடும் காட்சியை வித்தியாசமாக செய்துள்ளார்.
எல்லோரும் இதனை பின்தொடர்வார்கள் என்று நினைக்கிறேன். படம் பாருங்கள். நிறைய கடின உழைப்பை கொடுத்துள்ளோம். ஆடுகளம் எங்களுக்கு திருப்புமுனையான படமாக இருந்தது. மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும் என்ற பாடல் தான் தனுஷ் பாடலாசிரியராக எழுதிய முதல் பாட்டு” என்று பேசினார்.
தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும் போது, “ரஜினியுடன் தொடர்ந்து பல படங்கள் செய்துள்ளோம். தற்போது தனுஷுடன் மூன்று படங்கள் செய்துள்ளோம். எனது மகன் சொல்லித்தான் இப்படத்தின் கதையை படித்தேன். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படத்தை பார்த்து ரசித்தேன். நல்ல இயக்குநர் என்று நினத்தேன்.
பாரதிராஜாவுடன் பேசும்போது அருண் நல்ல திறமையானவர் என்று சொன்னார். அதன்பிறகு தனுஷிடம் சொல்லி இப்படத்தை தொடங்கினோம். ஆங்கிலப் படத்துக்கு இணையாக இப்படத்தை எடுத்துள்ளார். பொங்கலுக்கு எப்படி விஸ்வாசம் வெற்றிப் படமாக அமைந்ததோ, அதே போல கேப்டன் மில்லர் படமும் அமையும்” என்றார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசும்போது, “தயாரிப்பாளருக்கு நன்றி. 2011ல் தேவதாஸ் என்று படம் எழுதினேன் அதற்கு தனுஷை தேடினேன் அது நடக்கவில்லை. ராக்கி படத்திற்கும் தனுஷை நடிக்க வைக்க நினைத்தேன் அதுவும் முடியவில்லை. தனுஷுசன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறிவிட்டது. அடுத்தும் அவருடன் ஒரு படம் பண்றேன். அது இதைவிட பெரிய அளவில் இருக்கும். நான் என்ன கதை யோசித்தாலும் இவர்தான் முதலில் வருவார்.
எனது படங்கள் வெளியாவதற்கு முன்பே இப்படத்திற்கு ஓகே சொன்னார். இளம் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளவர். ஜிவி பிரகாஷ் உடன் 12 ஆண்டுக்கு முன்பு படம் பண்ண வேண்டியது. அது நடக்கவில்லை. சிவராஜ் குமார் நடித்த மஃப்டி படம் எனக்கு பிடித்து இருந்தது. அவரிடம் கதை சொன்னேன். அவரும் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் முதல் நாளே சிவராஜ் குமார் குதிரை ஓட்டும் சீன். கீழே விழுந்து விட்டார். நாங்கள் பயந்துவிட்டோம்.
ஆனால் அவர் எனக்கு எதுவும் இல்லை மற்றொரு டேக் எடுக்கலாம் என்றார். நான் எடுத்த படத்திலேயே குறைந்த வன்முறை காட்சிகள் உள்ளது இந்த படத்தில் தான்” என்று பேசினார்.
சிவராஜ் குமார் பேசும் போது, “கதை சொல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. தனுஷ் படம் என்றதால் நான் நடிக்கிறேன் என்றேன். தனுஷை அவரது முதல் படத்தில் இருந்தே எனக்கு பிடிக்கும். தனுஷிடம் நான் என்னை பார்க்கிறேன். தனுஷ் படத்தை பலமுறை பார்த்துள்ளேன். எனக்கு தனுஷ் பாடல் பாடியுள்ளார். அவரது மகன்கள் வருவார்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். உலக அளவில் சிறந்த நடிகராக மாறியுள்ளார். இதிலும் அப்படித்தான் நடித்துள்ளார்.
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். தனுஷ் அசைவம் சாப்பிடமாட்டார். அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் எனது மனைவி சாம்பார் செய்து கொடுப்பார்கள். ஜெயிலர் படத்துக்காக எனக்கு அன்பு கொடுத்ததற்கு நன்றி. அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. இளம் வயது மற்றும் வயதான தோற்றம் என நடிப்பது மிகவும் கடினம். அதனை தனுஷ் நன்றாக செய்திருந்தார்” என்று பேசினார்.
இதையும் படிங்க: சத்யராஜ் உடன் இணையும் வெற்றி - பூஜையுடன் தொடங்கிய புதிய படம்!