சென்னை: வடபழனி பிரசாத் லேபில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நான் 40 ஆண்டுகள் இந்த கலை உலகத்தில் பயணித்து வருகிறேன். தற்போது எதிர்மறையான கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்தாலும் நம் முகம் தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக பல படங்களில் ஹீரோவாகவோ, ஹீரோவுடனோ, வில்லனாகவோ என அனைத்து வேடங்களிலும் தேர்வு செய்து நடித்து வருகிறேன். இன்றைய தலைமுறையினருக்கு சரத்குமார் யார் என்று காட்ட வேண்டும் என்பதால் தொடர்ந்து நடித்து கொண்டு இருக்கிறேன்.
வாரிசு, பொன்னியின் செல்வன் 1, 2 படங்களில் எல்லாம் எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் எனக்கு மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். பொன்னியின் செல்வன் என்னை மணிரத்னத்திற்கு உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. வாரிசு படத்தில் நான் நடித்ததற்கு வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. வாரிசு படத்தை பார்த்து பாரதிராஜா என்னை பாராட்டினார்.
தற்போது 145 படங்களில் நடித்துள்ளேன். 150வது ஸ்மைல் மேன். மலையாளம், தெலுங்கு என 28க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். காஞ்சனா படத்திற்கு பிறகு ருத்ரன் படத்தில் நடிப்பதற்காக ராகவா லாரன்ஸ் என்னிடம் பேசினார். ருத்ரன் படத்தில் வில்லன் வேடம் என்றதும் சற்று தயங்கினேன். ஆனால் ஆடியன்ஸ் தற்போது படங்களில் அனைத்து கதாபாத்திரங்களையும் நன்றாக நடிக்கிறார்களா என்று தான் பார்க்கிறார்கள்.
நான் பல சோதனைகளை கடந்து வந்தவன். உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் எனது உறுதிதான் அதிலிருந்து நான் மீண்டு வரக் காரணம். சூர்ய வம்சம் இரண்டாம் பாகத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. சூரியன் 2 வரவும் வாய்ப்புள்ளது. ஜென்டில்மேன் படத் தலைப்பில் அதன் தயாரிப்பாளர் கேடி.குஞ்சுமோன் படம் எடுக்க உள்ளார் அதிலும் நான் நடிக்க உள்ளேன்” என்றார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விவாதத்தை கிளப்பி இருப்பது பற்றிய கேள்விக்கு, “இது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். எனது கதாபாத்திரத்தை அப்படி முடித்தது எனக்கு நிறைவாகத்தான் இருந்தது. இறுதியில் நந்தினி என்னை பற்றி பேசியது தான் எனக்கு வெற்றி. இந்த படத்தால் சோழர்கள் பற்றி வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வாய்ப்பு இல்லை. தற்போதைய இளைஞர்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் குறையவில்லை. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை தனி படமாக எடுத்தால் மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்த உடன் எனது மகனை பார்க்க சிங்கப்பூர் சென்றுவிட்டேன். அதனால் தான் பொன்னியின் செல்வன் புரொமோஷனுக்கு வரவில்லை.
சுபாஷ் சந்திர போஸாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. முடிந்தால் நானே இயக்கி நடிப்பேன். இளம் நடிகர்களுக்கு கூறிக்கொள்வது உறுதி, உழைப்பு இருந்தால் வெற்றிபெறலாம். எனக்கு எனர்ஜி இருக்கிறது நூறு ஆண்டுகள் நாயகனாக நடிப்பேன்.
ரஜினி பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தால் அவரை தான் மார்க்கெட்டிங் செய்திருப்பார்கள். அருகில் நந்தினி இருந்திருப்பார். எனது படத்தை போஸ்டரில் போட்டு விளம்பரம் செய்யவில்லை என்பதில் வருத்தம் இல்லை. விரைவில் என்னையே பிரதானப்படுத்தும் வகையில் மீண்டும் பல படங்களில் படிப்பேன். விக்ரம் வயதும் எனது வயதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். என்னை தாத்தா என்று விக்ரம் அழைப்பதால் எனக்கு ஒன்றும் இல்லை. எல்லா மொழிகளிலும் எனது சொந்த குரலில் தான் பேசியுள்ளேன். தற்போது ஆஸ்கர் ரொம்ப அருகாமையில் உள்ளது. முயற்சித்தால் முடியும்.
பார்த்திபன் பேசியது குறித்து தெரிந்து கொண்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன். நான் அனைத்து ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எல்லாத்தையும் தடை செய்ய முடியாது. உங்களுக்கு அதன் எல்லை தெரிய வேண்டும். போர்த் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் எனக்கு தெரிந்து சிறந்த இயக்குனர். சூப்பர் ஸ்டார் குறித்து நான் பேசியதை ரஜினியிடமே சொல்லிவிட்டேன். அவர் இதை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறிவிட்டார்.
இந்திய சினிமாவில் ராதிகா மிகப் பெரிய நடிகை என்று சொல்வேன். இன்னும் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்கவில்லை. விரைவில் குடும்பத்துடன் பார்ப்பேன். என்னுள்ளே மிகப் பெரிய வலி உள்ளது. நான் கிரிமினாலஜி படித்து வந்தேன். ஆனால் தேர்வு எழுதமுடியவில்லை. எனது வீட்டிற்கு வந்த ஒரு மாணவிக்கு அந்த புத்தகங்களை கொடுத்துவிட்டேன். நிறைய ஆங்கில புத்தகங்கள் படித்துள்ளேன். கருணாநிதி மூலம் தான் தமிழ் கற்றுக்கொண்டேன்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 1,111 வாக்குகள் பதிவு