சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக இருந்து தனது விடாமுயற்சியால் நடிகராக மாறியவர். முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த 'தீயா வேலை செய்யனும் குமாரு' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் எல்.கே.ஜி என்ற படத்தின் மூலம் கதை நாயகனாக அவதாரமெடுத்தார்.
அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் கதை நாயகனாக நடித்து குறிப்பிடும் நடிகனாக முன்னேறியவர். இணை இயக்குநராகவும் அவர் நாயகனாக நடித்த படங்களில் இருந்துள்ளார். இந்த நிலையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல், நடிகர் ஆர்ஜே பாலாஜியை வைத்து சமீபத்தில் 'சிங்கப்பூர் சலூன்' (Singapore Saloon) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம், ரன் பேபி ரன் படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இதில் ஆர்ஜே பாலாஜியுடன் சத்யராஜ், லால் உள்ளிட்டோர் முக்கியமான கதாப்பத்திரத்தில் நடித்துள்ளதாகவும், இப்படத்தில் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
வரும் ஜனவரி 25ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பட புரமோஷன் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஆர்.ஜே. பாலாஜி பேட்டி அளித்தார். அதில், தனக்கு நடந்த நெப்போட்டிசம் பற்றி நடிகர் ஆர்ஜே பாலாஜி பேசி உள்ளார். அவர் கூறுகையில், "இங்கேயும் நெப்போட்டிசம் இருக்கு. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் என்னை போன்று யாரும் இல்லாமலும், தன்னம்பிக்கையை வைத்து மட்டும் யாராவது ஒருவர் வந்து கொண்டு தான் உள்ளனர்.
எல்கேஜி என்ற எனது முதல் படத்தில் நடித்த போது எனது தயாரிப்பாளருக்கு, தற்போது நாயகன்களாக உள்ள சில தயாரிப்பாளர்களின் மகன்கள் செல்போனில் அழைத்து அவரை ஏன் கதாநாயகனாக வைத்து படம் எடுக்குறீர்கள் என்றும், அவர் இப்பவே ரொம்ப வாய் பேசுறார், அவரை ஏன் ஹீரோவாக்குறீங்க என கேட்டுள்ளனர் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் நெப்போட்டிசம் பிற திரைத்துறையில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் உள்ளது" என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்து உள்ளார்.