சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மன்சூர் அலிகான், சமீபத்திய படங்களில் காமெடி கலந்த வில்லனாக நடித்து வருகிறார். மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிகச் சிறிய வேடம் தான் என்றாலும் அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் தற்போது சரக்கு என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் சென்சாருக்கு சென்ற போது அதிகமான காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்குமாறு சென்சார் போர்டு தெரிவித்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். அம்பானி, அதானி போன்ற வசனங்கள் எல்லாம் வைக்கக் கூடாது என்று கூறியதாகவும் அவர் பேசியிருந்தார்.
திருநங்கைகளை மேம்படுத்துவதற்கு வைத்திருந்த ஒரு பாடலை, கவர்ச்சியாக உள்ளது என்று சொல்லி அதை எடுக்க வேண்டும் என கூறினர். மேலும் கூடங்குளம் மற்றும் இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக இருந்த பாடல் வரிகளை அகற்ற வேண்டும் என கூறினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வேறு யார் தான் கேள்வி எழுப்புவார்கள்? என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜை போருக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை கொடுத்து, ஒன்றை வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்குப் பாடுபடுகிறோம்! ஆனால், அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுட்றான்! லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல... அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு' !! ..
இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்! 500 மி.லிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்! அப்பாவிங்க சாகறாங்க… சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு… வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்” என்று அவரது பாணியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 31 years of Devar Magan : சர்ச்சையும், பாராட்டும் சம அளவில் பெற்ற 'தேவர் மகன்'... 2ம் பாகம் எப்போது?